அன்பு செலுத்துவீர்

by vizhiyan அன்பு செலுத்துவீர்
“நான் என் தம்பிக்காக ஐந்து முறை அழுதிருக்கிறேன். நாங்கள் பிறந்தது ஒர் மலைவாழ் கிராமம்.தினம் தினம் எங்கள் பெற்றோர்கள் வறண்ட பூமியை உழுது வந்தனர். வானம் பார்த்த பூமி.என் தம்பி என்னைவிட மூன்று வயது சிறியவன். ஒரு முறை எல்லா சிறுமியும் வளையல் அணிந்து இருப்பது போல நானும் அணிய ஆசைப்பட்டு அப்பா சட்டையில் இருந்து 1 ரூபாய் திருடிவிட்டேன். அப்பாவிற்கு தெரிந்து விட்டது.

என் தம்பியை முட்டி போட வைத்தார்.மூங்கில் குச்சியால் அடித்தார்.”யார் திருடியது”.ஒரு ரூபாய்க்கு கூட அத்தனை போரட்டம் அப்போது. அப்பாவை பார்க்க பயமாக இருந்தது. பேசக்கூட இல்லை. “யார் திருடியது, சொல்லிடுங்கள், இல்லை இருவருக்கும் அடி விழும்.” அவர் மூங்கில் குச்சியை உயர்த்தினார் என்னை அடிக்க. உடனே என் தம்பி அப்பா கையை பிடித்து “அப்பா நான் தான் எடுத்தேன் “. அதன் பின்னர் எப்போது மூங்கில் அவன் முதுகையும் உடலையும் பதம் பார்த்த சத்தம் நின்றது என்ற நினைவே இல்லை.தன் சக்தி தீரும் வரை அடித்தார். விளாசினார்.திட்டினார்.”இப்பவே திருட கற்றுக்கொண்டாயே , இன்னும் என்னென்ன செய்ய போகிறாயோ?.சண்டாளா?”.

அந்த இரவு நானும் அம்மாவும் அவனை கட்டிப்பிடித்து அழுதோம். உடல் முழுக்க ரண காயங்கள். அவன் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. நடு இரவு,துக்கம் தாங்காமல் அலறி விட்டேன்.என் வாயை பொத்தி “நடந்தது நடந்துவிட்டது. தூங்கு அக்கா”. எனக்கு என்னை பிடிக்காமல் போனது. நேற்று நடந்தது போல உள்ளது, வருடங்கள் பல உருண்டோடியும். அப்போது அவன் வயது 8, எனக்கு 11″

எனக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்பாவிற்கு கவலை. இனிமேலும் பெண்ணை படிக்கவைக்க வேண்டுமா? இரண்டு பேர் படிக்க காசு போதாதே. அம்மாவும் அப்பாவும் பேசும் போது தம்பி குறுக்கிட்டு “நான் படிப்பை நிறுத்திவிடுகிறேன். அக்கா படிக்கட்டும்”. தவடை பதம் பார்க்கப்பட்டது. “என்ன பெரிய மனிஷனா நீ?.பிச்சை எடுத்தாச்சும் இரண்டு பேரையும் படிக்கவைப்பேன். போடா”. என் தம்பி கன்னத்தில் இதமாக கைவைத்து “ஓரு ஆண் கண்டிப்பா படிக்கனும்.இல்லை அவனுக்கு வறுமை தான் வாழ்நாள் முழுதும்” என்றேன். நான் படிப்பை நிறுத்துவதென முடிவெடுத்தேன். யாருக்கு தெரியும் ஒர் அதிகாலையில் சில அழுக்கு துணிகளுடன் தம்பி காணாமல் போனான். என் புத்தகத்தில் ஓர் குறிப்பு “அக்கா, நல்ல படி, கல்லூரிக்கு செல். நான் சம்பாதித்து உனக்கு பணம் அனுப்புகிறேன்.” கதறி கதறி அழுதேன் கண்ணீர் வற்றும் வரை.எனக்கு வயது 18 அவனுக்கு 15.

ஒரு நாள் கல்லூரி கடைசி ஆண்டில் படிக்கும் போது,என் அறை தோழி, “ஒரு கிராமத்தான் உனக்காக வெளியே காத்திருக்கிறான்” யார் என்று பார்த்தால் என் தம்பி. உடலில் சிமெண்ட் தூசிகள். “ஏன் என் தோழியிடம் நான் உன் அக்கா என்று சொல்ல வேண்டியது தானே”. “என்னை பார் அக்கா.எத்தனை அழுக்கு.உன் தம்பி என்றால் உன்னை என்ன நினைப்பார்கள்? உன்னை பார்த்து சிரிக்க மாட்டார்களா?” துக்கம் தொண்டையை அடைத்தது. “எப்படி இருந்தாலும் நீ என் தம்பிடா”. அணைத்து கொண்டேன் அவனை. என்னை விலக்கி, அவன் சட்டை பையில் இருந்து ஒரு தோடு எடுத்து, “ஊரில் எல்லா பெண்களும் அழகழகா போட்டிருக்காங்க, அது தான் உனக்கும் வாங்கினேன். இந்தா” என்னவென்று சொல்ல அவன் அன்பை..எனக்கு வயது 21 அவனுக்கு 18.

முதல்முறை என்னை கட்டிக்கொள்ளும் கணவான் வீட்டுக்கு வந்த போது வீடே சுத்தமாக இருந்தது. உடைந்த கண்ணாடிகள் சரி செய்யப்பட்டு இருந்தது. அம்மாவிடம் “எதற்கம்மா உனக்கு இந்த வேலை இந்த வயதில்?”. அம்மா “உன் தம்பி தான் எல்லாம் செய்தது.”.சின்னஞ்சிறு அறையில் கையில் கட்டோடு படுத்திருந்தான். கண்ணாடி குத்தி விட்டது போலும். அதை பார்த்த போது, ஆயிரம் ஊசிகள் மனதை குத்தி குதறியது. “வலிக்குதா..” கண்ணீருடன். “வலி இல்லையே.. இது என்ன பிரம்மாதம் கட்டட கூலியா இருந்த போது கல்லே காலில் விழுந்தாலும் வேலை செய்வோம்”..கள்ளமற்ற சிரிப்போடு..எனக்கு 26 அவனுக்கு 23

என் கணவர் ஒரு தொழிற்சாலை முதலாளி, தம்பிக்கு மேலாளர் பதவி தருவதாக கூறினார். அவன் மறுத்துவிட்டான். சில காலம் பின்னர், அவனுக்கு திருமணம் நடந்தது. திருமண விழாவில் “நீ யாரை மிகவும் நேசிக்கிறாய் , யாரிடம் உனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்று கேட்டனர். அவன் யோசிக்காமல் “என் அக்காள்” என்றான். அவன் சின்ன வயதில் நடந்த கதையை கூறினான். “நான் சின்ன வயதில் படிக்கும் போது நானும் அக்காவும், தினமும் 2 மணி நேரம் நடந்து செல்வோம் பள்ளிக்கு, காட்டு வழியாக. ஒரு நாள் என் செருப்பு பள்ளி விட்டு வரும்போது கிழிந்து விட்டது. அக்கா தன் செருப்பை தந்தாள். வழி நெடுக முட்கள். கற்கள்.வீடு வந்து சேர்ந்த போது அவள் கால் முழுக்க ரத்தம். காயங்கள். அதன் பின்னர் நடக்க கூட முடியவில்லை ஒரு வாரத்திற்கு.. அப்போது முடிவு செய்தேன் நான் என் அக்காவை நன்றாக பார்த்து கொள்வேன் என்று”

அரங்கமே அதிர்ந்தது கூடியிருந்தவர்கள் கை தட்டலால். எல்லோர் பார்வையும் என் மீது “வாழ்வில் ஒருவனுக்கு கடமை பட்டது யாரெனில் என் தம்பிக்கு தான் “. அந்த சந்தோஷ தருணத்திலும் என்னால் கண்ணீரை கண்ணுக்குளே வைக்க முடியவில்லை…
ஒவ்வொரு நாளும் சக மனிதரோடு அன்பும் பாசமும் பாரட்டுங்கள்.
உங்கள் அன்பு உங்களுக்கு கடுகளவு சின்னதாக இருக்கலாம், ஆனால் அதுவே மற்றவருக்கு மலையாக இருக்கலாம். அன்பு கொள் மானிடா அன்பு கொள்..
-விழியன்
( ஆங்கிலத்தில் எங்கோ எப்போது படித்த கதையின் அடிப்படையில்)
http://vizhiyan.wordpress.com/2010/05/06/love-short-story/#comment-4941