அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.
இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.
“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”
உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.
தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.
“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.
அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.
“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”
“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.
அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.
”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”
“பாப்பானு எப்படி சொல்றீங்க?”
“எனக்கு ஜோசியம் தெரியும்”
“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”
“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”
“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”
“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”
”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”
“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”
“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”
“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”
“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”
“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”
“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”
“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”
“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”
“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”
“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”
“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”
“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”
“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”
“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.
நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.
நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.
இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.
“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”
“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”
“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”
”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.
ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.
ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.
”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது
தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.
மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.
வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.
தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்
“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”
”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”
வைத்தேன்.
“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”
“”
“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”
“ஆகும்னு”
“தூக்கறாங்களாம். அதான்…”
“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”
“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”
“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”
“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”
“அப்பறம் என்ன பிரச்சனை?”
“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”
“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”
”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”
இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது. என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. எதையாவது பிடித்து கொள்ள வேண்டும். வேலையிலிருந்து நீக்கும் போது இருந்ததை விட ஆயிரம், லட்சம் மடங்கு உடைந்துவிட்டது போல் தோன்றியது. உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது.
மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.
“ஏன்டா செல்லம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த வீட்டைக் கூட வித்திருக்கலாமேடா. இதுக்காக நீ இவ்வளவு வலியைத் தாங்கணுமாடா?”
“குட்டிப் பாப்பா ரெசஷன்ல கஷ்டப்பட வேண்டாம்னுதாங்க”
……………………..
From Vettipayal:
http://vettipayal.wordpress.com/2009/05/30/kuttipaap/